×

அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு நாட்டு மாடுகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த, சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். நாட்டு மாடுகளுக்கு திமில் இருப்பதால், ஜல்லிக்கட்டு வீரர்கள்  அதனை பிடிக்க வசதியாக இருக்கும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இல்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, சங்க காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது. காளைகளை அடக்கும் ஆண்களையே அந்த காலத்தில் திருமணம் செய்ய பெண்கள் சம்மதிப்பர். அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு என்பது தமிழக மக்களின்  கலாசாரத்தோடு பிணைந்த ஒரு நிகழ்வாகும்.

பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் வதைக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2014ல் தடை விதித்தது.ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்ச  நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தமிழகத்தில் இளைஞர்கள்  பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மக்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாகவும், நாட்டு மாடுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு 2017ல் சட்ட திருத்தம் கொண்டுவந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த  சட்டதிருத்தம் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாசார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலுமான சரத்துக்களை அடக்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடுதல் ஆகியவற்றிலும் நாட்டு மாடுகள் பங்கேற்று வருகின்றன. ஆனால், இந்த விளையாட்டுகளில் கலப்பின மாடுகளும் ஈடுபடுத்தப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.ஆனால், வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடையில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாதத்தை ஏற்க முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள்தான் என்று கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.



Tags : Jallikkat , ICC order to the state Only country cows are allowed in Jallikkat
× RELATED “ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற...