×

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் வருகை 75% ஆக அதிகரிப்பு: அதிகாரி தகவல்

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்ட  நிலையில், நேற்று முன்தினம் 75% மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மேலும் 25%  மாணவர்கள் வராதது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுக்கு பிறகு 9, 10, 11, 12ம் வகுப்புகள்  மற்றும் கல்லூரிகள் நேற்று முன்தினம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள்,  32 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் தற்போது 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்காக 70 பள்ளிகள் உள்ளன. இவற்றில்  மொத்தம் 13,336 மாணவர்கள், 13,992 மாணவிகள் என 27,328 பேர் பயின்று  வருகின்றனர். அவர்களுக்கு முதல் நாளான நேற்று முன்தினம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.  மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மாநகராட்சி கல்வி  அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோருடன்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி  பள்ளிகளில் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை அனைத்தும் பெற்றோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.  இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக  உறுதியளித்தனர். அதன்படி முதல் நாளான 1ம் தேதி 27,328 மாணவிகளில் 16  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதாவது 75 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். மீதமுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் (25 சதவீதம் பேர்)  பள்ளிக்கு வரவில்லை.2வது நாளான நேற்று அதைவிட சற்று கூடுதலாக மாணவர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் 18 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 25 சதவீதம் மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக வரவில்லையா அல்லது வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்தி விட்டார்களா என்பதை கண்டறியும் வகையில் பெற்றோர்களின் ெசல்போன் எண், வீட்டு முகவரி பெற்று மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர கல்வி அலுவலர் பாரதிதாசன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளில் 27,340 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒருசில பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே சமூக இடைவெளி காரணமாக அதிகளவு படிக்கும் பள்ளிகளில் மாணவர்களை பகுதி வாரியாக பள்ளிக்கு வரும்படி, அந்தந்த பள்ளிகள் அறிவுறுத்துகின்றன. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் 22,218 மாணவர்கள் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 15,024 மாணவர்கள் வந்திருந்தனர். நேற்று 22,405 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 14,205 மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அதன்படி 75 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

மேலும் பள்ளிக்கு வராத 25 சதவீத மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்கள், அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் உள்ளது. எனவே வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறோம். பெற்றோர்களிடம் பேசியதில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகள் துவங்கி ஓரிரு நாட்கள் தான் ஆகிறது என்பதால் விரைவில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai Corporation , In Chennai Corporation schools 75% increase in student attendance: official information
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...