மாணவி, அவரது தாய்க்கு பாலியல் தொந்தரவு சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்பட 2 வழக்கு பாய்ந்தது: சிபிசிஐடி அதிரடி

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து, கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவசங்கர் பாபா அவரது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து 3 போக்சோ சட்டங்களின் கீழ் சிவசங்கர் பாபாவை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதைதொடர்ந்து முதல் போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது தான் ஆண்மையற்றவர் என்று தெரியவந்ததாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழை காண்பித்து ஜாமீன் கோரினார். ஆனால் நீதிமன்றம் ஆண்மையற்றவராக இருந்தால் இரண்டு குழந்தைகள் எப்படி பிறந்தது என்று கூறி சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இந்நிலையில், சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட சுஷில் ஹரி பள்ளியில் தங்கி படித்த முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் அவரது தாய் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரிடம் உரிய ஆவணங்களுடன் பாலியல் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பள்ளியில் படித்த மாணவி மற்றும் அவரது தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதை அவரது பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளும் உறுதி செய்துள்ளனர்.

அதைதொடர்ந்து சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும், மாணவியின் தாய் அளித்த புகாரின் படி தனியாக ஒரு வழக்கும் என அடுத்தடுத்து 2 வழக்குபதிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள சிவசங்கர் பாபா தனித்தனியாக இந்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்படுவார் என்று சிபிசிஐடி போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

More
>