வணிகர் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும்: பேரவையில் பிரபாகர் ராஜா வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா(திமுக) பேசியதாவது:மாணவர்கள் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க அரசு உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க சிறு, குறு வணிக துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடம் என்றால் என்ன என்று பல்வேறு தரப்பினர் வினா எழுப்புகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் திராவிடம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூலம் மாணவர்களை அழைத்து சென்று திராவிட வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் திராவிட அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

1989ம் ஆண்டு வணிகர் நல வாரியம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது வரை 47,299 பேர் இந்த வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டு காலமாக இந்த வாரியத்தை முறையாக செயல்படுத்த கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வாரியத்தை சீரமைத்து தர கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று வணிகர்களுக்கு வழங்கப்படும் பேரிடர் கால இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கி தர அரசு ஆவணம் செய்ய வேண்டும்.  கோயம்பேடு ஒருங்கிணைந்த வணிக வளாகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். அங்கு அவருக்கு சிலை நிறுவ வேண்டும். இங்கு குவிந்திடும் குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்து பயோ காஸ் தயாரிக்க அரசு முன்வர வேண்டும். விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையில் தடுப்புசுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More