போலி பத்திரப்பதிவை தடுக்க புதிய சட்ட மசோதா: பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: போலி பத்திரப்பதிவை தடுக்கும் வகையில், புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்ட முன்வடிவு ஒன்றை கொண்டு வந்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஆவணங்களில் மோசடி பதிவுகளை குறைப்பதற்கு அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும், தீவினைக்கஞ்சாத நபர்களால் பொய்யான விற்பனை ஆவணங்கள் மூலம் உண்மை நில உரிமையாளர்களுக்கு மிகவும் துன்பத்தை விளைவிக்கும் வகையில் இன்னும் சொத்துக்களின் மீது வில்லங்கம் ஏற்படுகிறது என்பது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களின் பதிவில் மோசடி, பொய்யாவணம் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்கு பதிவு செய்யும் அலுவலரால் பதிவுக்கு முன்னதாக மூல உரிமை ஒப்பாவணம், வில்லங்க சான்றிதழ், வருவாய் ஆவணங்கள் போன்றவற்றை சரிபார்த்தல் தொடர்பாக பல சுற்றறிக்கைகள் பதிவு துறை தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் பொய்யான ஆவணங்களின் பதிவு தொடர்ந்து நடக்கிறது. அதை ரத்து செய்வதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் அரசை அணுகுகின்றனர். 1908ம் ஆண்டு பதிவு சட்டத்தின் வகை முறைகளானது பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காகவும் கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் அளிக்காமல் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கிறது. இந்த நோக்கத்திற்காக பதிவு துறை தலைவரால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையானது அதன் சட்டபூர்வமான ஆதரவை பெறுவதற்கு வகை செய்ய பொருத்தமான விதிகளை அமைப்பதற்கு அரசுக்கு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவை நாடும் பொதுமக்களின் துன்பத்தை தணிப்பதற்கு மேற்சொன்ன மைய சட்டம் 1908ஐ தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் மேற்சொன்ன நோக்கங்களுக்காக தக்கவாறு திருத்துவது என அரசானது முடிவு செய்துள்ளது. இச்சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விளைகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சிறை தண்டனை

இந்த சட்டத்தின் கீழ் பதிவிற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் பதிவுக்கு பொறுப்புடையவரான ஒவ்வொரு நபரும் 22-ஏ பிரிவு அல்லது 22-பி பிரிவிற்கு முரணாக ஆவணத்தை பதிவு செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம், ஒரு கால அளவிற்கான சிறை தண்டனையுடன் அல்லது தண்டனை தொகையுடன் அல்லது இந்த இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

Related Stories:

>