16 சுங்கச்சாவடிகளுக்கு பதில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

பாபநாசம் ஜவாஹிருல்லா (மமக): ஒன்றிய அரசு மக்களிடையே கந்துவட்டி காரனைவிட மோசமாக வசூல் செய்து வருகிறது. பெரும் பொருளாதார தாக்குதலை தமிழக மக்கள் மீது நடத்துகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அனைத்து சுங்க சாவடிகளையும் கட்டணம் இல்லாமல் மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.அமைச்சர் எ.வ.வேலு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்க கட்டண விதி 2008ன் படி மாநகர், நகர் எல்லை பகுதிகளில் 10 கி.மீட்டருக்குள் உட்பட்டு இருந்தால் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது. ஆனால், சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், கூரப்பட்டு, பரனூர் ஆகிய 5 சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த 5 சுங்க சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையம் போட்ட விதியின்படி நகரத்தின் ஒட்டிய பகுதிக்குள் உள்ளது. எனவே, இந்த 5 சுங்க சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினோம். இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த உடன் 5 சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கட்டாயம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்த முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தொடர் முடிந்ததும் டெல்லி செல்கிறோம்.தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. 2ம் கட்டமாக அதையும் நீக்க வலியுறுத்துவோம்.

Related Stories: