நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் ரூ.1.6 கோடியில் கட்டிய அரசு பள்ளி கட்டிடம் 3 ஆண்டில் தொட்டாலே உதிரும் அவலம்: நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தல்

நெமிலி: நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் ரூ.1.61 கோடியில் கட்டப்பட்ட அரசுப்பள்ளிக் கட்டிடம் கை வைத்தாலே உதிரும் அவல நிலையில் உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, அதிமுக ஆட்சியில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில்  இரண்டு அடுக்கு மாடி கட்டிடம்  கட்டப்பட்டது. இதனை கடந்த  20.02.2018ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 3 ஆண்டிலேயே வெளிப்புற சுவர்கள் அனைத்தும் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டும் அளவுக்கு காணப்படுகிறது. மேலும் பள்ளி மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர்களே பிளாஸ்டிக் டேங்க் அமைத்து குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்களம், மாணவர்களின் பெற்றோரும் கூறுகையில், இந்த பள்ளி கட்டிடத்தின் சிமென்ட் பூச்சுகள் அனைத்தும் கை வைத்தாலே உதிர்ந்து விடுகிறது. சில இடங்களில் செங்கற்கள் கூட வெளியே தெரியும் அளவுக்கு சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது. இதனால் இந்த கட்டிடத்தின் உறுதி கேள்விக்குறியாகி உள்ளது.

மாணவர்கள் கல்வி பயிலும் கட்டிடங்களையும் தரமற்ற முறையில் கட்டி உயிருடன் விளையாடலாமா?. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கவே அச்சமாக உள்ளது. இந்த கட்டிடத்தை உடனடியாக  மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மாணவர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மற்ற கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: