×

அஷ்வினை விட அணி முக்கியம்: விராத் விளக்கம்

லண்டன்:  அஷ்வினை அணியில் சேர்க்காதது ஏன் என்ற கேள்விக்கு ‘தனிநபர்களை விட அணி முக்கியம் ’ என்று இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் ஆட்டம் நேற்று லண்டன்  ஓவல் அரங்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் சாம் கரன், ஜோஸ் பட்லருக்கு பதில் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி போப் களம் கண்டனர். இந்திய அணியில் முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுக்கு பதில் ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டனர். எதிர்பார்த்தது போல் அஷ்வினுக்கு 4வது டெஸ்ட்டிலும் வாய்ப்பு தரவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய கோஹ்லி, ‘முதலில் பந்து வீச விரும்பினோம். ஆனால் டாசில் வெல்வது நம் கையில் இல்லை. அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளோம்’ என்று முடித்துக் கொண்டார்.

‘அணியில் ஏன் அஷ்வின் சேர்க்கவில்லை’ வர்ணனையாளர் விடாமல் கேள்வியாக கேட்கவே, ‘தனி நபர்கள் மீது கவனம் செலுத்த முடியாது. அணியின் ஒருங்கிணைப்புதான் முக்கியம். இங்கிலாந்து அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜடேஜா நன்றாக பந்து வீசுவார். கூடவே அவர் 7வது பேட்ஸ்மேனாக விளையாடுவது அவசியம்(ஆனால் 5வது பேட்ஸ்மேனாக ஜடேஜா களமிறங்கினார்). இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிய இன்னும் நாட்கள் இருக்கின்றன’என்று கூறினார். தோற்றாலும், அஷ்வினை அணியில் சேர்க்கக் கூடாது என்பதில் கோஹ்லி உறுதியாக இருக்கிறார். என்னதான் ஒருவருக்கு திறமை, ஆற்றல் இருந்தாலும் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு இல்லை  என்றால் அவ்வளவுதான்.... அதற்கு அஷ்வினும் உதாரணமாகி உள்ளார்.

* ஆண்டர்சன் சாதனை
உள்ளூரில் அதிக டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சச்சின் சாதனையை இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். அவர் 95வது டெஸ்ட்டில் விளையாடுகிறார். சச்சின் 94 டெஸ்ட்களில் ஆடியிருக்கிறார்.
* அதிவேகம் கோஹ்லி
முதல் இன்னிங்சில் 18வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் கோஹ்லி பவுண்டரி விளாசினார். அதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 23 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற சாதனையை கோஹ்லி படைத்தார். அவர் 490*இன்னிங்சில் இந்த சாதனையை எட்ட, சச்சின் 522வது இன்னிங்சிலும், ரிக்கி பாண்டிங் 522வது இன்னிங்சிலும் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

Tags : Ashwin ,Virat , Team is more important than Ashwin: Virat Description
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...