பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை எஸ்பி கண்ணனை விடுவிக்க சிபிசிஐடி போலீசார் கடும் எதிர்ப்பு: விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் எஸ்பி கண்ணனை விடுவிக்கக்கூடாது என சிபிசிஐடி போலீசார்  விழுப்புரம் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தமிழக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து, அவர்களை தமிழகஅரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு  விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்  மனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் எஸ்பி கண்ணன் நேரில் ஆஜரானார். அவர், ஏற்கனவே வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரியும், கூடுதல் ஆவணங்கள் கேட்டும் 2 மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்தது. எஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பெண் எஸ்பியின்  காரை வழிமறித்து நிறுத்தவில்லை, காருக்குள் யார் இருக்கிறார் என்று கூட தெரியாது, உயர்அதிகாரியின் உத்தரவை மதித்து பணி செய்தார். எஸ்பி மீது சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குற்றப்பத்திரிகை, எப்ஐஆரில் முரண்பாடுகள் இருக்கிறது, இந்த வழக்கிற்கு  சம்பந்தமில்லாத எஸ்பி கண்ணனை விடுவிக்க வேண்டும் என வாதிட்டனர். சிபிசிஐடி  போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், எஸ்பி கண்ணன்தான் பெண் எஸ்பியின் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கக்கூடாது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி  கோபிநாதன், விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Related Stories:

>