×

2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியா: மாநிலங்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம்

டெல்லி : மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் காச நோய்க்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சிநிலை குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாருடன் இணைந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் இன்று ஆய்வு நடத்தினார்.

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறை குறித்து விவாதிக்கவும் அதன்படி காசநோயை ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் அவ்வபோது   கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் யோசனை தெரிவித்தார். இதன் மூலம் அனைவரும் இணைந்து இலக்குகளை அடைய முடியும் என்றார் அவர். “இலக்குகளை அடைவதற்கு ஒருங்கிணைந்த மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய முயற்சிகள் வலுவான பங்களிப்பை அளிக்கும்”, என்று அவர் குறிப்பிட்டார்.

“காச நோயை ஒழிக்கும் இந்த இயக்கத்தில் சாமானிய மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களின் முன்முயற்சியாக இது மாற வேண்டும்”, என்றும் அவர் தெரிவித்தார். வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதற்கு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அனைத்து வகையான கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கூறினார். கொவிட், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இதர திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொது சுகாதார மேலாண்மைக்கான கருத்துக்களையும் வழங்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன்கள் பற்றியும் 2025-ஆம் ஆண்டிற்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்கும் இயக்கத்திற்கு ஆதரவான தங்களது திட்டங்களையும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துரைத்தன.



Tags : India ,Minister of , மத்திய அரசு
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...