×

நடத்தையில் சந்தேகம், குடும்பத்தில் பிரச்னை: தாய், தந்தை, சகோதரி, பாட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை..! அரியானா கல்லூரி மாணவர் வெறிச்செயல்

ரோஹ்தக்: நடத்தையில் சந்தேகம், குடும்பத்தில் பிரச்னை போன்ற காரணங்களால் தனது தந்தை, தாய், சகோதரி, பாட்டி ஆகியோரை சுட்டுக் கொன்ற கல்லூரி மாணவரை அரியானா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பிரதீப் மாலிக் (45). இவரது மனைவி சந்தோஷ் (40), மாமியார் ரோஷ்னி தேவி (70), மகன் அபிஷேக் (20), மகள் ேநஹா (19). இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தந்தை, தாய், சகோதரி, பாட்டி ஆகியோரை நோக்கி அபிஷேக் சரமாரியாக சுட்டார். அடுத்த ஒருசில நொடிகளில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் வருவதையறிந்த அபிஷேக் அங்கிருந்து தப்பிவிட்டார்.

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடிய 4 பேரில் நேஹாவை தவிர மற்ற மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நேஹா பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அபிஷேக்கின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அவர் மீது சந்தேகம் வந்ததால் அவரை தேடினர். தலைமறைவாக இருந்ததால், போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதையடுத்து, நேற்று தனிப்படை போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

இதுகுறித்து ரோஹ்தக் போலீஸ் எஸ்பி ராகுல் சர்மா கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட அபிஷேக், தந்தை உட்பட 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அபிஷேக்கின் தனிப்பட்ட நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், பொருளாதார பிரச்னைகளாலும் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக கொன்றதாக கூறியுள்ளார். இருந்தும், 4 பேரை சுட்டுக் கொல்லும் அளவிற்கு அவர்கள் மீதான வெறுப்பு என்ன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த கொலை சம்பவத்தில் மற்றவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கிறோம்’ என்றார்.

Tags : Haryana College , Suspicion of behavior, problem in the family: mother, father, sister, grandmother shot dead ..! Haryana College Student Hysteria
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு