×

ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருத்தணி: ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மாபள்ளி அணை நிரம்பியதையடுத்து நேற்றிரவு 8.30 மணிக்கு அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே வெளியகரம், புண்ணியம் வழியாக சென்று மீண்டும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி வழியாக நல்லாட்டூர், அருங்குளம், லட்சுமாபுரம், நாபலூர், முத்துகொண்டாபுரம் வழியாக சென்று திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கு செல்கிறது.

இதன்காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் வேறிடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்படி, ஆர்டிஓ சத்யா, தாசில்தார் ஜெபராணி, வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சுளா, சந்திரசேகர் ஆகியோர் தலைமையில், அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகளுடன் சேர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரையோரம் வசித்துவரும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லவேண்டும். தங்களது உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags : Andhra Dam ,Kosasthalai river , Andhra Dam, Kosasthalai River, Flood
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...