×

யூடியூப் சேனல்கள் செய்தி இணையதளங்களில் பொறுப்பில்லாமல் பொய் செய்திகள் வெளியிடுகின்றன!: உச்சநீதிமன்றம் கவலை

டெல்லி: யூடியூப் சேனல்கள் செய்தி இணையதளங்களில் பொறுப்பில்லாமல் பொய் செய்திகள் வெளியிடப்படுவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதம் ஆக்கப்படுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் ஜமிஅத் - உலேமா - ஏ -ஹிந்த் அமைப்பு சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, யூடியூப் சேனல்கள் செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்படுவதாக கவலை தெரிவித்தது.

அதிகாரம் மிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே அவை எதிரொலிப்பதாகவும், எந்தவித பொறுப்பும் இன்றி எதை வேண்டுமானாலும் பதிவிட்டு வருகிறார்கள் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராகவும் கூட கருத்துக்கள் பதியப்படுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் இதுபோன்ற யூடியூப் சேனல்களை முறைப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் முயற்சித்திருக்கிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இவை கையாளப்படும் என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.


Tags : YouTube ,Supreme Court , YouTube Channel, False News, Supreme Court
× RELATED யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு