×

போலி டிகிரி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தெலங்கானா அரசு அதிகாரிகள் காமராஜர் பல்கலையில் விசாரணை

திருப்பரங்குன்றம் : தொலைநிலைக்கல்வியில்  போலி டிகிரி சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெலங்கானா  அரசு அதிகாரிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக சென்னை மையத்தில், கடந்த 2013ம் ஆண்டு சரவணன் என்பவர் பிஎஸ்சி கணிதம் படிக்க விண்ணப்பித்தார்.

 2019ம் ஆண்டு இதற்கான மதிப்பெண் சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றை பெற்றார். பின்னர் இவர் தெலங்கானாவில் அரசு பணியில் சேர்ந்தார். அப்போது அவருடைய சான்றிதழ்கள் போலி என தெலங்கானா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில், டிகிரி சான்றிதழ் போலியானது எனவும், புரொவிஷனல் சான்றிதழ் உண்மையானது எனவும் முரணான தகவல்கள் கிடைத்தன.

இதனைத்தொடர்ந்து தெலங்கானா அரசு அதிகாரிகள் கொண்ட 4 பேர் குழு நேற்று முன்தினம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. தொலைநிலை கல்வி இயக்ககம், தேர்வாணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த மாணவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த காலகட்டத்தில் எத்தனை பேர் இதுபோல் போலியாக சான்றிதழ் பெற்று, தெலங்கானா அரசு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தெலங்கானா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கிடப்பு

ஏற்கனவே காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் வழியாக ஏராளமானோர் பணம் கொடுத்து மதிப்பெண் சான்றிதழ் வாங்கிய விவகாரம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் போலி சான்றிதழ் விவகாரத்தில் தெலங்கானா அரசின்  தற்போதைய விசாரணை  விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

Tags : Telangana ,Kamaraj University , Madurai kamaraj University, Fake Certificate, Telangana Officials,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!