×

அவையில் யாரை எங்கு, எப்படி அமரவைப்பதில் சபாநாயகருக்கே அதிகாரம் : திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் அதிரடி!!

சென்னை : திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினராக கருதக் கூடாது என தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு எம்எல்ஏக்களையும் எதிர்கட்சி எம்எல்ஏக்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாக கருத முடியும். இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல். சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது.  இந்த எம்எல்ஏக்களை எதிர்கட்சி எம்எல்ஏக்களாக கருதி, சட்டப்பேரவையில் தனி இருக்கை வழங்க கூடாது. சட்டப்பேரவையில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது,என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு சட்டப்பேரவையில் உறுப்பினர்களை எங்கு எப்படி அமரவைப்பது, எப்படி கட்சிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது போன்ற முடிவுகள் முழுக்க முழுக்க சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது; நீதிமன்றத்திற்கு என ஒரு லட்சுமண ரேகை இருக்கிறது. அந்த லட்சுமண ரேகை தாண்டப்படக் கூடாது. அதுமட்டுமல்லாமல் இந்த மனுவில் எந்த பொது நலனும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்து செய்கிறோம்,என்று உத்தரவிட்டனர்.


Tags : Speaker , High Court, Discount
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...