×

நெல்லை- திருச்செந்தூர் சாலை விரிவாக்கத்திற்காக பாலங்கள் சீரமைப்பு பணியால் போக்குவரத்து திடீர் மாற்றம்

*முன்னறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அவதி

செய்துங்கநல்லூர் : நெல்லை -திருச்செந்தூர் சாலை விரிவாக்கத்திற்காக பாலங்கள் சீரமைக்கும் பணி காரணமாக முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  ஆன்மீக ஸ்தலங்களான திருச்செந்தூர், நவதிருப்பதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் வாகன போக்குவரத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

மேலும் தொழில் ரீதியாக நெல்லை,  கன்னியாகுமரி, தென்காசி  மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள், திருச்செந்தூர் வழியாக வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.  இதனால் இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் சென்னை -கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தின்படி ஹைவேஸ்  சாலை அமைக்கும் திட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து பாளையங்கோட்டை வரை ரூ.435 கோடி மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய சாலை அமைக்கப்படுகிறது. ஒரு இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கும், 2 இடங்களில் வாகனத்தில் வந்து செல்பவர்களும்,  பக்தர்களும் ஓய்வு எடுத்து செல்லும்  வகையில் கழிவறையுடன் கூடிய தங்கும் அறையும் அமைக்கப்பட உள்ளது.

ஆதிச்சநல்லூர் பாலத்தை விரிவாக்கம் செய்ய தொல்லியல் துறையினர் அனுமதி தராததால் ஆழ்வார்திருநகரில் இருந்து ஸ்ரீவைகுண்டம், தோழப்பன்பண்ணை, கொங்கராயக்குறிச்சி வழியாக கருங்குளம் வரை புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனிடையே கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து செய்துங்கநல்லூர் அருகே உள்ள வெட்டியபந்தி விலக்கு வரைக்கும் சிறுபாலங்களை விரிவாக்கம் செய்வதற்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றியும், முறையான மாற்று வழிப்பாதையை ஏற்பாடு செய்யாமலும் நேற்று காலை திடீரென சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் இரவே சாலை மூடப்பட்டதால் பொதுப்போக்குவரத்து மற்றும் கார்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் நொச்சிகுளம் அனவரதநல்லூர், வீ.கோவில்பத்து வழியாக செய்துங்கநல்லூர் வந்து செல்கின்றனர். பேருந்துகள் கிருஷ்ணாபுரம் வராமல் வி.எம்.சத்திரத்தில் இருந்து தூத்துக்குடி சாலையில் சென்று வசவப்பபுரம் வழியாக செய்துங்கநல்லூர் செல்கின்றன.

 இதனால் ஆரோக்கியநாதபுரம், ஆச்சிமடம், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதி மக்கள் பஸ் வசதியின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். வசவப்பபுரத்தில் இருந்து செய்துங்கநல்லூர் வரும் சாலை மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், திருச்செந்தூர் சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் பொது போக்குவரத்து கார், லாரி அனைத்தும் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எதிர் எதிரே வரும் வாகனங்கள் வழிவிட சாலையை விட்டு இறங்கும்போது மண்ணில் பதிந்து விடுகின்றன. இந்த சாலையில் முட்செடிகளும் அதிகளவில் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜன்னலோர பஸ் பயணிகளை பதம் பார்க்கின்றன. இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கூறுகையில், முறையான மாற்றுப்பாதையை ஏற்படுத்தி விட்டு சாலையை மூடியிருக்க வேண்டும். முன்னறிவிப்பின்றி சாலை மூடப்பட்டதால் சில பகுதிகளுக்கு பஸ் வசதி தடைபட்டுள்ளது.

தற்போது வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள சாலையில் பள்ளங்களை சரி செய்து முட்செடிகளை அகற்றியிருக்க வேண்டும். ஆபத்தான இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. வரும் நாட்களிலாவது இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மூடப்பட்ட சாலைகளில் கயிறு மட்டும் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சாலை மூடப்பட்டுள்ளது எச்சரிக்கை பலகை வைத்து மாற்றப்பாதை விவரங்களை அறிவிக்க வேண்டும், என்றனர்.

Tags : Nellai-Thiruchendur , Tirunelveli, Tiruchendur, Bridge Work,Road Change
× RELATED வெள்ள பாதிப்பால்...