ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடல் பெரியகுளத்தில் இன்று தகனம் :அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி

தேனி : மாரடைப்பால் காலமான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் பெரியகுளத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம்தென்னரசு, உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு ஆறுதல் கூறினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் நேற்று மருத்துவமனையில் ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து விஜயலட்சுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. பெரியகுளம் நகர் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சம்பத், நத்தம்விஸ்வநாதன், செல்லூர்ராஜூ, உதயகுமார், அன்வர்ராஜா, ராஜேந்திர பாலாஜி, வீரமணி, ஜெயபால், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அஞ்சலி செலுத்தினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ எம்எல்ஏ நயினார்நாகேந்திரனுடன் வந்து மரியாதை செலுத்தினார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் வீட்டிற்கு வந்து, அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருக்கு ஆறுதல் கூறினர். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.இறுதிச்சடங்குகளுக்கு பிறகு பெரியகுளம் வடகரையில் உள்ள நகராட்சி மயானத்தில் மதியம் 12 மணியளவில் விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: