×

செய்யாறு அருகே கி.பி. 13ம் நூற்றாண்டு கோமாரி குத்துக்கல் கண்டெடுப்பு

*துர்க்கை அம்மனாக வழிபடும் கிராம மக்கள்

செய்யாறு : செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோமாரி குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை கிராம மக்கள் துர்க்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள வேப்ப மரத்தடியில் மந்தைவெளி மாட்டுக்கல் எனும் அரியவகை கோமாரி குத்துக்கல்லை வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது: செய்யாற்றைவென்றான் கிராமத்தில் மந்தவெளி மாட்டுக்கல் எனப்படும் கோமாரி குத்துக்கல் 4 நூற்றாண்டுக்கும் மேலாக திறந்தவெளியில் உள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்தபோது குத்துக்கல்லில் சதுர, வட்ட வடிவ கட்டங்கள் அமைத்து, மந்திர எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்நடைகளின் உருவமும், மந்திர எழுத்துக்களும் சரிவர தெரியவில்லை. காலப்போக்கில் தேய்ந்து மறைந்து போயிருக்கலாம். இந்த அரியவகை கோமாரி குத்துக்கல்லை இவ்வூர் மக்கள் துர்க்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனர்.

கால்நடைகளை தாக்கும் ‘கோமாரி’ என்ற கொடிய நோயில் இருந்து பாதுகாக்க, இந்த குத்துக்கல்லை வலம்வர செய்து வழிபாடு நடத்துகின்றனர்.  இந்த வகையான வழிபாட்டு முறை சோழர் மற்றும் பல்லவர் காலத்தில் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட இந்த குத்துக்கல் கி.பி. 13 மற்றும் 14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

கிராம மக்கள் இன்றளவும் மாட்டுப் பொங்கலன்று தங்களது கால்நடைகளை இந்த கோமாரி குத்துக்கல்லை சுற்றி வலம்வர வைத்து வழிபடுகின்றனர். மேலும், துர்க்கை அம்மனாக வழிபடும் குத்துக்கல்லின் எதிரே சிறிய அளவில் நந்தியை பிரதிஷ்டை செய்து வழிபடுவதுடன், அதன் கீழ் எண்ணெய் சட்டி வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது கொரோனா பெருந்தொற்று நோயில் இருந்து பாதுகாக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதுபோல், அந்த காலத்தில் கால்நடைகளை காப்பாற்ற கோமாரி குத்துக்கல் வழிபாடு நடைமுறையில் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Do Ki RB , Cheiyaru,Durgai Amman, Kuthukkal
× RELATED நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு