கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளால் நிலம் நீர், காற்று மாசடைகிறது: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேச்சு

கும்மிடிப்பூண்டி: தமிழக சட்டசபையில் முதன் முறையாக பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைகளால் நிலம், நீர் காற்று மாசடைகிறது என்று கூறினார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரான டி.ஜெ.கோவிந்தராஜன், தமிழக சட்டசபையில் தனது கன்னிப்பேச்சை நேற்றுமுன்தினம் உரையாற்றினார். அதில்  கும்மிடிப்பூண்டி தொகுதி வளர்ச்சி திட்டங்கள் தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைள்  வைத்துள்ளார். சட்டசபையில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி அடுத்த பொன்னேரி வல்லூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கடந்த ஆட்சியில் மாயமானதை குறிப்பிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பெரியபாளையம் அருகே கொசஸ்தலை  ஆற்றின் குறுக்கே ரூ. 38 கோடியில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா காணும் முன்னே புயல் மழைக்கு சேதமடைந்த நிலையில், தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரரை சேதமுற்ற அணையை செப்பனிட செய்ய உத்தரவிடாமல் , அந்த சேதத்தை சரிசெய்ய ரூ. 18 கோடி ஒதுக்கி மக்கள் வரிப் பணம் வீணாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 400 தொழிற்சாலைகள் இருப்பதால் நிலம், நீர், காற்று மாசடைகிறது. இந்த சூழலில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்கிற மருத்துவ, ரசாயன,

தொழிற்சாலை கழிவுகளை சேகரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அங்கு மலை போல கழிவுகள் குவிக்கப்பட்டு சுற்றுச்சூழலை பாதித்துள்ளதால், அந்த தொழிற்சாலையின் 2ம் அலகு செயல்பட உள்ளதால் கும்மிடிப்பூண்டி பகுதி மக்களின் நலன் கருதி அந்த தொழிற்சாலையின் 2ம் அலகை தடுத்து நிறுத்தவேண்டும். தொழிற்சாலைகள் கழிவு நீரை சாலையோரங்களில் கொட்டி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், கும்மிடிப்பூண்டியில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன், விதைகள் தருவது  உதவி உபகரணங்கள் தர வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு மாந்தோப்புகள் உள்ள நிலையில் மா பயிரிடும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட கும்மிடிப்பூண்டியில் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திடவும், மாதர்பாக்கம், பாதிரிவேடு, மாநெல்லூர், புதுகும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரணி உள்ளிட்ட பகுதிளில் அதிக அளவு நெசவாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.

திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத பல கட்டிடங்கள் உள்ளதால், அந்த கட்டிடங்களை மாவட்ட மருத்துவமனையாக பயன்படுத்த வேண்டும் எனவும், கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியாக உள்ளதாலும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் கிராமபுரமாக இருப்பதாலும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் தேவை எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Stories:

>