×

திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி, மணவாளநகர் கே.இ. நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில்; மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது : திருவள்ளுர் மாவட்டத்தில் 1900 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது.

இதில் 762  மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இன்று அனைத்து பள்ளிகளிலும் உள்ள 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகள் துவங்கப்பட்டு, நடத்தப்படுகிறது. சுமார் 1 லட்சத்து10 ஆயிரம் மாணவர்களும், 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பாகவும் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர்கள் என கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணி புரிகின்றனர்.

இதில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று மாணவர்களின் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பாக சுமார் 150 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழுக்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நேற்று மட்டுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் காரணங்களால் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பது தொடர்பான விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரும் பட்சத்தில் அப்பள்ளி, கல்லூரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் உடல், மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆசிரியர்கள் தம் கற்பித்தல் பணியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்வாய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி, கே.இ.என்.சி. மேல்நிப்பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன், மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Thiruvallur district , Opening of Schools in Tiruvallur District: Collector Inspection
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100...