×

இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா

* தமிழகத்துக்கு மிக அருகில் வருவதால் நாட்டுக்கு ஆபத்து  
* எல்லா சதித்திட்டங்களுக்கும் உடந்தையாகும் கோத்தபயா

கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் வலுவாக காலூன்றிய சீனா, அடுத்ததாக ஈழத்தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடத் தொடங்கி விட்டது. அப்பகுதியில் காற்றாலை, மீன் வளர்ப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு இலங்கை நிலம் ஒதுக்கி தந்துள்ளது. தமிழக கடல் பகுதியிலிருந்து மிக மிக அருகில் சீனா நெருங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் பேராபத்தாக கருதப்படுகிறது. அண்டை நாடுகளை ஓட விட்டு, தென் சீன கடலை மொத்தமாக ஆக்கிரமித்த சீனா, அடுத்ததாக ஆசியாவின் முடிசூடா மன்னனாக தன்னை வளப்படுத்திக் கொள்ள, இந்திய பெருங்கடலைக் குறிவைத்துள்ளது.

இதற்காக இந்திய பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தையும் தனது காலடியின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானை அடிமைப்படுத்தி விட்ட சீனா, இலங்கையையும் மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. ஒருகாலத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த இலங்கை, 2009க்குப் பிறகு உள்நாட்டுப் போர் ஓய்ந்ததும் மொத்தமாக மாறியது. குறிப்பாக, முந்தைய அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆட்சியில் இலங்கை, சீனா பக்கம் சாய்ந்தது. தற்போது அங்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் சீனாவுடன் இலங்கை அதிக நெருக்கம் காட்டி வருகிறது.

கடன் கொடுத்து நாடுகளை வளைக்கும் வித்தையை இலங்கையிலும் சீனா வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம், பல்வேறு வளங்கள் நிறைந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் ராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையை கைப்பற்றிய சீனா, இலங்கையின் தென் பகுதியில் வலுவாக காலூன்றிய நிலையில், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண பிராந்தியத்திலும் நுழையத் தொடங்கி உள்ளது.

இலங்கையின் வடக்கே மன்னார் வளைகுடா பகுதியில் பிரமாண்ட காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கை முன்னெடுத்தது. இத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் சீன நிறுவனங்களுடன் சேர்ந்து செய்ய கோத்தபய ராஜபக்சே அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஏற்கனவே இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வடக்கு மாகாண கடலோர கிராமங்களில் கடல் அட்டை வளர்ப்பு திட்டத்திற்காக சீனாவுக்கு இலங்கை அரசு நிலம் ஒதுக்கி தந்துள்ளது. இதுவும் உள்ளூர் மீனவர்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது.

இதுமட்டுமின்றி வடக்கில் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் செய்ய சீனா தயாராகி வருகிறது. அம்பாந்தோட்டை கன்னியாகுமரியிலிருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், காற்றாலை திட்டங்களை செயல்படுத்த சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழக கடல் பகுதியில் இருந்து வெறும் 50 கிமீ மட்டுமே உள்ளன. இந்த அளவுக்கு சீனா, இந்தியாவுக்கு மிக மிக அருகில் நெருங்கி வருவது நிச்சயம் பேராபத்தே என இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு பணத்துக்காக சீனாவின் எல்லா திட்டங்களுக்கும் இலங்கை அதிபர் கோத்தபயா தலையாட்டுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி வருகிறது.

சீனாவின் கைக்குள் சென்ற நாடுகள்
இலங்கை, பாகிஸ்தானை தவிர இந்திய பெருங்கடலை ஒட்டிய சீசெல்ஸ், மொரீஷியஸ், மாலத்தீவு, வங்க தேசம், மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளையும் சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்திய பெருங்கடலை சீனா ஆக்கிரமிப்பதில் மிகப்பெரிய தடையாக இருப்பது இந்தியா மட்டுமே.

இலங்கையில் பொருளாதார அவசரநிலை
ஏற்கனவே பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை அரசு, கொரோனாவால் மேலும் தடுமாற்றத்தை கண்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடும் தட்டுப்பாடு காரணமாக, சர்க்கரை ஒரு கிலோ ₹200க்கு மேல் உயர்ந்தது. பருப்பு ₹250 ஆக அதிகரித்தது. அரிசி உள்ளிட்ட அன்றாட பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொருளாதார அவசர நிலையயை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமல்படுத்தி உள்ளனர். இதன்படி இனி அத்தியவாசிய பொருட்களை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உன்னிப்பாக கண்காணிப்பு
இந்திய கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘‘சீனா தனது கொள்ளையடிக்கும் கடன் கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் ஆழமான ஊடுருவிள்ளது. இப்போது, முடிந்தவரை இந்திய கடல் பகுதிக்கு அருகில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதியுடன் செயல்படுகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பிரச்னையாக அமையலாம். இது நிச்சயமாக கவலை அளிக்கிறது. இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு புறக்கணித்து வருகிறது. இந்த விஷயத்தை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என்றனர்.

Tags : China ,Northern Province ,Sri ,Tamils , China will encircle the Northern Province, the home of Sri Lankan Tamils
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...