×

முழு தொகை செலுத்திய 15 ஆயிரம் குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மீதான மானியகோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* சென்னை மற்றும் இதர நகரங்களில் பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகள், தொழில்நுட்ப குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நான்கு ஆண்டுகளில் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ரூ.1200 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும்.
* எம்யூடிபி, டிஎன்யூடிபி திட்டங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் 1977 முதல் 1992 வரையில் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களின் கீழ் மாதாந்திர தொகை முழுவதுமாக செலுத்திய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும். மறு விற்பனை மூலம் தற்போது வசித்து வரும் குடியிருப்போருக்கு விற்பனை பத்திரம் வழங்க புதிய சமரச திட்டம் வகுக்கப்படும்.
* தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாதாந்திர தவணைத் தொகை முழுமையாக செலுத்திய குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பிற்கு பின்னர் விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும். 2021-2022ம் நிதியாண்டில் 15 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும்.
* தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியகட்டிடங்களின் தரத்தினை உறுதி செய்ய சென்னை ஐஐடி, தேசிய தொழில்நுட்ப கழகம், அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் போன்ற மூன்றாம் தரப்பு தரக்கட்டுபாட்டு வல்லுநர் குழுக்களை நியமித்து ஆய்வு மேற்கொண்டு கட்டிடப் பணிகளின் தரம் உறுதி செய்யப்படும்.
* மறுகட்டுமானம் செய்ய ஏதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்து வாடகை வீட்டில் வசிப்பதற்காக வழங்கப்படும் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
* நம் குடியிருப்பு-நம் பொறுப்புஎன்ற புதிய திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நலச்சங்கங்களை ஈடுபடுத்தி குடியிருப்புகள் பராமரிக்கப்படும். குடியிருப்புகளின் பராமரிப்பு செலவினங்களுக்கான மொத்த செலவில் 50 விழுக்காடு அரசாலும், மீதமுள்ள 50 விழுக்காடு குடியிருப்போர் நலச் சங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
* அடுக்குமாடி திட்டப்பகுதியில் உள்ள தரைதள குடியிருப்புகள் மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப அமைக்கப்படும்.
* குடிசைப்பகுதிகள் மற்றம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பு திட்டப் பகுதிகளில் விளையாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
* கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,610 கோடியில் வீடுகள் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Thamo Anparasan , 7,500 flats for sale to 15,000 families: Minister Thamo Anparasan
× RELATED நேற்று வரை அதிமுகவுடன்...