×

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என பெயர் மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது `தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது வருமாறு: கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக சிந்தித்தவர் தலைவர் கலைஞர். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அந்த மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கினார். அதன்மூலமாக, பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தார்.  

அன்றைக்கு மத்தியிலே அமைச்சராக இருந்த ‘பாபுஜி’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாபு ஜெகஜீவன்ராம், அந்த திட்டத்தை பற்றி குறிப்பிட்டு பாராட்டி, புகழ்ந்து பேசியிருக்கிறார்.  மேலும், இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற அவரது எண்ணத்தையும் அன்றைக்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார். அந்தளவிற்கு இந்த குடிசை மாற்று வாரியம் மிக சிறப்பாக தன்னுடைய கடமையை செய்திருக்கிறது, செய்து கொண்டு வருகிறது.  

ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வாரியம், இனிமேல் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரிலே அழைக்கப்படும் என்பதை இந்த மன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu Slum Conversion Board ,Tamil Nadu Urban Habitat Development Board ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu Slum Conversion Board renamed as 'Tamil Nadu Urban Habitat Development Board': Announcement by Chief Minister MK Stalin
× RELATED தென்சென்னை தொகுதியில்...