அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி; பெரியகுளத்தில் இன்று உடல் தகனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி திடீர் மாரடைப்பால் நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரது உடல், இன்று தகனம் செய்யப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66). இவர்களுக்கு கவிதா பானு என்ற மகளும், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர். ரவீந்திரநாத், தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஓபிஎஸ் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் தி.நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

உடல் எடை பருமனை குறைப்பதற்காகவும், வயிற்றுப் பிரச்னை தொடர்பாகவும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதனால் அவர் குணமடைந்து வந்தார். நேற்று காலை வீடு திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் காலை 6.45 மணிக்கு காலமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மற்றும் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் விரைந்து சென்றனர். மனைவியின் மரணம் குறித்த தகவல் தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். அவரை உறவினர்கள் தேற்றினர். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் குறித்த தகவல், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர், மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு மலர் அஞ்சலி செலுத்தியவர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திர நாத்துக்கு ஆறுதல் கூறினார்.

முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் சென்று ஆறுதல் கூறினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன், பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு தகவல் தெரியவந்ததும், அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர். விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு, ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 - 11 மணியளவில் பெரியகுளம் நகர் வடகரையில் உள்ள நகராட்சி எரிவாயு மேடையில், விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இல்லத் துணையைப் பிரிந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: