×

பஞ்ச்ஷிரில் மசூத் படை கடும் சண்டை ஆப்கானில் வெடித்தது உள்நாட்டு போர்: 350 தலிபான்கள் பலி; 40 பேர் சிறைபிடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும், முன்னாள் துணை அதிபர் மசூத் சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும் மோதல் வெடித்துள்ளது. இருதரப்புக்கும் நேற்று நடந்த கடும் சண்டையில் 350 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள், நேற்று முன்தினம் முழுமையாக வெளியேறியது. ஏற்கனவே, இங்கு ஆட்சியை கைப்பற்றி விட்ட தலிபான் தீவிரவாத அமைப்பு, அமெரிக்க படை வெளியேறியதை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன் தனித்து ஆட்சி அமைத்தது போல் இல்லாமல், இந்த முறை ஆப்கானை இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், முக்கிய தலைவர்களும் உள்ளடக்கிய புதிய அரசை அமைக்க தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, இதற்கு முன் ஆட்சி செய்த தலைவர்களுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. தலிபான்களின் தலைமை தளபதி ஹைபதுல்லா அகுந்த்சடா அரசை நிர்வகிக்கும் முக்கிய தலைவர் பொறுப்பிலும், ஹைபதுல்லாவின் 3 துணைத் தலைவர்களில் ஒருவராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், அரசின் அன்றாட நிர்வாக அலுவல்களை கவனிக்கும் பொறுப்பிலும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானில் தற்போது பஞ்ச்ஷிர் மாகாணத்தை தவிர, நாட்டின் இதர பகுதிகள் அனைத்தும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானை விட்டு ஓடிய அதிபர் அஷ்ரப் கனியின் அரசில் துணை அதிபராக இருந்த அகமது மசூத் சாலே தலைமையிலான, ‘தேசிய கிளர்ச்சி படை’யின் கட்டுப்பாட்டில் பஞ்ச்ஷிர் உள்ளது. இந்த படையில் ஆப்கான் ராணுவத்தின் முன்னாள் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெரும் போராட்ட தலைவரான அகமது ஷா மசூத்தின் மகன்தான் அகமது மசூத் சாலே. ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடையும்படி, இந்த படையினரை தலிபான்கள் எச்சரித்து வந்த நிலையில், இருதரப்புக்கும் நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் குல்பகார் பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவ முயன்ற தலிபான்கள் மீது மசூத் படை தாக்குதல் நடத்தியது. பர்வான் மாகாணத்தின் ஜபல் சராஜ் மாவட்டம். பக்லான் மாகாணத்தில் உள்ள காவாக் பஞ்ச்ஷிர், அந்த்ராப் மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து நடந்த இந்த உள்நாட்டு போரில் 350 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்ட தலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் மசூத் படை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், அமெரிக்க படை விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள், டேங்கர்கள் போன்றவற்றை மசூத் படை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, ‘பஞ்ச்ஷிர் முழுவதும் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது,’ என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த உள்நாட்டு போரால், ஆப்கானில் பதற்றம் நிலவுகிறது.

* அமெரிக்க ராணுவ வாகனங்கள், சீருடையுடன் தலிபான் பேரணி
ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்க, நேட்டோ படைகள், 70க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ராணுவ வாகனங்கள், நவீன ஆயுதங்களை விட்டு சென்றுள்ளது. இவற்றை தலிபான்கள் பயன்படுத்த முடியாத வகையில் தொழில்நுட்ப ரீதியாக செயலழிக்கச் செய்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், அமெரிக்காவின் இந்த ராணுவ வாகனங்கள், ஆயுதங்களை மட்டுமின்றி, அமெரிக்க வீரர்கள் விட்டு சென்ற ராணுவ சீருடைகளை கூட அணிந்து கொண்டு கந்தகார், அய்னோ மையினா உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்கள் வெற்றி ஊர்வலம் நடத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

* புத்திசாலித்தனமான முடிவு
படை வாபஸ் பெறப்பட்டது பற்றி நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன் நேற்று ஆற்றிய உரையில், ``ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டது சிறந்த, சரியான, புத்திசாலித்தனமான முடிவாகும். இப்போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த போர் முடிந்து விட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தேன். தற்போது அதை நிறைவேற்றி விட்டேன்,’’ என்றார்.

* அமெரிக்காவுக்கு கிடைத்தது ஜீரோ
ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ``ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் படைகளை நிறுத்தி அமெரிக்கா தங்களின் வாழ்க்கை முறையை நிலை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அவை அனைத்தும் முற்றிலுமாக தோல்வியில் முடிந்தது. ஆப்கானில் மொத்தத்தில் அமெரிக்காவுக்கு கிடைத்தது `ஜீரோ’ மட்டுமே,’’ என்றார்.

* இந்திய தலைவர்கள் அறிவுரை
முன்னாள் ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் நட்வர் சிங், யஷ்வந்த் சின்கா, காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், ஜாமியா மிலியா முன்னாள் துணை வேந்தர் நஜீப் ஜங், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் ஒன்றிய அரசுக்கு நேற்று விடுத்த கோரிக்கையில், `ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலைகளை பயன்படுத்தி தேர்தல் லாபத்துக்காக அரசியல் கட்சிகள் மக்களிடையே பிரிவினையை தூண்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தலிபான்களுடன் ஒன்றிய அரசு தோகாவில் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையை வரவேற்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து நட்புறவில் இருக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளனர்.

Tags : Afghan Afghan civil war ,Taliban , Fighting erupts in Afghan Afghan civil war: 350 Taliban killed; Capture of 40 people
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை