×

இந்தியாவின் எதிரி பட்டியலில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர் ஆதரவுடன் ஆப்கானில் புதிதாக முளைத்தது:‘தெஹ்ரீக்-இ-தலிபான்’ அமைப்பு: ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’ பாகிஸ்தானின் பங்கு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: ஆப்கானில் புதியதாக உருவாகியுள்ள ‘தெஹ்ரீக்-இ-தலிபான்’ தீவிரவாத அமைப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் பங்கு உள்ளதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க படைகள் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களின் அரசு அமையவுள்ளது. தீவிரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கையுள்ள அவர்கள், ஒரு நாட்டையே வழிநடத்த உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் முற்றிலும் மாறிவிட்டது போன்ற தோன்றத்தை உலக மக்களிடம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர்களின் தீவிரவாத நடவடிக்கை, பெண்கள் உரிமை பறிப்பு, போதை பொருள் சப்ளை, ஆயுதங்கள் கடத்தல் போன்றவை தொடர்ந்த வண்ணம் உள்ளன. உலக நாடுகளும் தலிபான்களை இன்னும் நம்பவில்லை. ஆனால், தலிபான்களின் நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா,  துருக்கி போன்ற நாடுகள் உள்ளன.

இதில், தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவானது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்று, உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து உளவுத்துறை மூத்த அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ‘அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பின்னர், அங்கு நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய தீவிரவாத கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர், ‘தெஹ்ரீக்-இ-தலிபான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய கூட்டணியானது, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹக்கானி போன்ற தீவிரவாத நெட்வொர்க்குடன் இணைந்து செயல்பட உள்ளது. புதியதாக உருவாகியுள்ள அமைப்பின் ‘ஸ்கிரிப்ட் ரைட்டராக’ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ உள்ளது.

மேற்கண்ட தீவிரவாத அமைப்புகளில் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் ஆகிய இரண்டும் இந்தியாவின் மிகப்பெரிய எதிரிகள் பட்டியலில் உள்ளன. இந்த இரண்டு அமைப்புகளும், இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கும் திட்டங்களை வகுத்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர் முகமது இப்ராகிம் அசார் ஆகியோரிடம் ஐஎஸ்ஐ ஒப்படைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகள் மற்றும் மசூத் அசாரை சந்தித்தனர். இந்த மசூத் அசார்தான், கடந்த 1999ம் ஆண்டில் நடந்த கந்தகார் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவன். தற்போது, தலிபான்களுக்கு உதவுவதற்காக ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதிகளை மசூத் அசார் அனுப்பி உள்ளார். அவர்கள், புதிய தலிபான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்புள்ளது.  

அதேநேரம், லஷ்கர் - இ- ெதாய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், லாகூரில் (பாகிஸ்தான்) உட்கார்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கான வேலைகளை செய்து வருகிறார். இவரது பணியானது, தீவிரவாத செயல்களுக்கான சர்வதேச நிதியை திரட்டுவதுதான். மசூத் அசார் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பார். ஹபீஸ் சயீத் தீவிரவாத செயல்களுக்காக நிதி திரட்டுவார். அதனால், தலிபான்கள் தங்களுக்கு முழு ஆதரவாக உள்ளதாக பாகிஸ்தான் நம்பியுள்ளது. இந்த தீவிரவாத தொடர்புகள், இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் நிலைப்பாடு சர்வதேச அளவில் சரியானதாக இருந்தாலும், பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்க வேண்டியுள்ளது. ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இவை எந்த சந்தர்பத்திலும் இந்தியாவுக்கு எதிராக (காஷ்மீர் உட்பட) திரும்ப வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.


Tags : Jaysh ,India ,Lashkar ,Tehreek-e-Taliban ,Pakistan , India, Taliban organization, Pakistan, intelligence, warning
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்