கைம்பெண் மகளிர் நலவாரியம், குழந்தை நலக் குழுக்கள் அமைக்கப்படும் : பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!!

சென்னை: கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்:

அறிவிப்பு எண். 01.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 75 இலட்சம் முதியோர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  2017-2018 ஆம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 11.2 விழுக்காடாக உள்ளது.  தமிழ்நாட்டில் 2030 ஆம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் முதியோர்களின் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் “மாநில மூத்த குடிமக்கள் கொள்கை” உருவாக்கப்படும்.

அறிவிப்பு எண். 02.

அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்திடவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும், அவர்களை தயார்படுத்துவதற்கும், உரிமைகளை பெற்றுத் தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் “தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை” உருவாக்கப்படும்.

அறிவிப்பு எண். 03.

தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, கைம்பெண்கள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்படும்.

அறிவிப்பு எண். 04.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களிடையே பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வருடம் முழுவதும் ஏற்படுத்த வேண்டியுள்ளது.  தற்பொழுது அதற்காக வேண்டிய பயிற்சி வழங்குவதற்கு, அடிப்படை வசதிகளை கட்டமைக்க வேண்டிய அவசியம் எழுகிறது. எனவே, தாம்பரத்தில் செயல்பட்டு வரும் சேவை இல்லத்தில் உள்ள கட்டிடங்களை புதுப்பிக்கவும் மற்றும் பயிற்சி அளித்திட தேவையான தளவாட சாமான்களை வாங்கிடவும் ரூபாய் 1 கோடியே 18 இலட்சம் செலவில் துறைக்கான பயிற்சி மையம் ஆரம்பிக்கப்படும்.   

அறிவிப்பு எண். 05.

தமிழ்நாடு அரசால், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்மாவட்டங்களில் “சமூக நல அலுவலகங்கள்”, “குழந்தைகள் பாதுகாப்பு அலகு”, “இளைஞர் நீதிக் குழுமங்கள்” மற்றும் “குழந்தை நலக் குழுக்கள்” புதியதாக ஏற்படுத்தப்படும்.

அறிவிப்பு எண். 06.

பெண் குழந்தைகளின் கல்வி நிலை உயர்ந்துள்ளதால் அவர்கள் திருமணம் செய்யும் வயதும் உயர்ந்துள்ளது.  பல சூழ்நிலைகளால் திருமணங்கள் தாமதமாகவே நடைபெறுவதால் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுக்கும் போது தாயாரின் வயது 35-ஐ கடந்து விடும் நிலை உள்ளது. எனவே, திட்டத்தின் நோக்கங்களை முழுமையாக அடையவும், அதிக எண்ணிக்கையில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தில் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பு 35 லிருந்து 40 ஆக உயர்த்தப்படும்.

அறிவிப்பு எண். 07.சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களுள் தற்போது வரையில் 20,680 சத்துணவு மையங்களுக்கு சமையலறைக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  மேலும், சத்துணவு திட்டத்தில் 1291 சத்துணவு மையங்களுக்கு 69 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டிடங்கள் கட்டப்படும்.

அறிவிப்பு எண். 08.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 1000 சத்துணவு மையங்களில், மையம் ஒன்றுக்கு தோராயமாக ரூபாய் 8000 வீதம், மொத்தம் ரூபாய் 80 இலட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும்.

அறிவிப்பு எண். 09.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,174 சத்துணவு மையங்களின் வாயிலாக 42.13 இலட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இப்பயனாளிகளுக்கு பள்ளி வளாகத்தினுள்ளேயே நாள்தோறும் பல்வேறு வகையிலான சூடான சுவைமிக்க கலவை சாதத்துடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உலர் உணவுப் பொருட்களுடன் 10 முட்டைகளும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.  உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரினும், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது குழந்தைகள் முழுமையான பயன் அடைந்துள்ளார்களா என்பதை கண்டறியும் பொருட்டு, பள்ளி திறக்கும்போது, உடல் நிறை குறியீட்டின்படி (BMI) மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை இரண்டு மாதங்களுக்குள் கண்டறிய ரூபாய் 2 கோடி செலவினத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 43,174 பள்ளிகளில் பயிலும் 42,13,617 சத்துணவு பயனாளிகளுக்கு உடல் நிறை குறியீட்டு எண் (Body Mass Index) கணக்கீடு செய்யப்படும்.  ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  

அறிவிப்பு எண். 10.

ஊரகப் பகுதி, நகர்ப்புற பகுதி. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தனியார் வாடகை கட்டிடங்களில் செயல்படும் 7228 அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாத வாடகை தொகையான ரூ.750, ரூ.3000 மற்றும் ரூ.5000, முறையே ரூ.1000, ரூ.4000 மற்றும் ரூ.6000 - ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அறிவிப்பு எண். 11.

அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 2 வயதிற்குட்பட்ட இளம் சிறார் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குழந்தைகளைப் பேணுவோருக்கு உணவூட்டும் முறைகள் குறித்த சுயமதிப்பீட்டுத் தாள்கள் வழங்கும் திட்டமானது மீதமுள்ள 27 ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

அறிவிப்பு எண். 12.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி பயில வருகை புரியும் 2 வயது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், எஞ்சியுள்ள 7 மாவட்டங்களான கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 4 கோடியே 38 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.

அறிவிப்பு எண். 13.

மின்வசதியின்றி அரசு சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் 7,757 அங்கன்வாடி மையங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்படும்.

அறிவிப்பு எண். 14.

சென்னை மற்றும் திருநல்வேலி மாவட்டங்களில் சிறுவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து காணப்படுவதால் அவர்களை அப்போதை பழக்கத்திலிருந்து மீட்டு, நன் மக்களாக சமுதாயத்தில் உயர்த்திடும் பொருட்டு, சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் போதை தடுப்பு மையங்கள் ரூபாய் 76 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

அறிவிப்பு எண். 15.

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் மதுரையில் மண்டல அலுவலகம் மீண்டும் தோற்றுவிக்கப்படும்.

அறிவிப்பு எண். 16.

குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு (Institutional care) மாற்றாக, குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கும், மாதந்தோறும் ஒரு குழந்தைக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும்.

அறிவிப்பு எண். 17.

யூனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு பயிற்சி மையம் (Tamil Nadu State Child Protection Academy) சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும்.

Related Stories:

>