மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி மரணம் அடைந்தார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து மேல்சபை செல்லும் எம்பிக்களின் ஒரு இடம் காலியானது. இந்த காலி இடத்தை நிரப்புவதற்காக செப்டம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. அப்துல்லாவின் மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார். சுயட்சையாக போட்டியிட்ட 3 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டன. வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் தமாநிலங்களவைக்கு அப்துல்லா போட்டியின்றி தேர்வு ஆகிறார். அப்துல்லா போட்டியின்றி தேர்வாவது குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களே மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரே, தமிழக மாநிலங்களவை எம்பி பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. வெற்றிபெறும் மாநிலங்களவை எம்பி 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி வரை பாராளுமன்ற மேல்சபை எம்பியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>