×

சின்னாளபட்டி பகுதியில் மணம் வீசும் மரிக்கொழுந்து

*கிலோ ரூ.30 வரை விற்பதால் மகிழ்ச்சி

சின்னாளபட்டி : சின்னாளபட்டி  பகுதியில் நன்கு விளைந்த மரிக்கொழுந்துகளை பறித்து மார்க்கெட்டிற்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ரூ.30க்கு விற்கப்படுவதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னாளபட்டியை சுற்றியுள்ள செட்டியபட்டி,  கலிக்கம்பட்டி, முருகன்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, பெருமாள்  கோவில்பட்டி, ஜெ.ஊத்துக்கோட்டை, அமலிநகர், காமலாபுரம், செம்பட்டி,  நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வந்தி, கனகாம்பரம், சம்பங்கி,  காக்கரட்டான், கோழிக்கொண்டை பூ, செவ்வரளி, வெள்ளை அரளி, ஜாதிமல்லி,  மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, மருகு பயிர்களை சீசனுக்கு தகுந்தவாறு  விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். ஒரு சிலர் தங்களது விளைநிலங்களில்  தொடர்ந்து மருகு, மரிக்கொழுந்துவை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  2 மாதங்களுக்கு முன்பு சேலம் பகுதியிலிருந்து மரிக்கொழுந்து நாற்றுகளை  வாங்கி நடவு செய்தனர். தற்போது மரிக்கொழுந்து நன்கு வளர்ந்து வருகின்றன.  பச்சை கம்பளம் விரித்தது போல் மரிக்கொழுந்து தோட்டங்களில்  மணம்  பரப்புகின்றன. நன்கு வளர்ந்த மரிக்கொழுந்தை பறித்து மார்க்கெட்டிற்கு  அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விலை கிடைத்து வருவதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மரிக்கொழுந்து விவசாயி முருகன்  கூறுகையில், ‘நன்கு விளைந்த மரிக்கொழுந்தை பறித்து பூ மார்க்கெட்டிற்கு  அனுப்பி வைக்கிறோம். மார்க்கெட்டில் தற்போது 1 கிலோ மரிக்கொழுந்து ரூ.20  முதல் ரூ.30 வரை விலைபோகிறது. கதம்பம் மற்றும் மல்லிகை பூ சரங்களில்  மரிக்கொழுந்துவை வைத்து கட்டினால் நறுமணம் வீசும் என்பதால் பூ வியாபாரிகள்  அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர்’ என்றார்.

Tags : Chinnalapatti , Marikolunthu, Chinnalapatti, Farmers happy
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...