×

ஆழியார் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

*கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆனைமலை :பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி நேற்று 4 மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை, நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் தொகுப்புகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்றைய நிலவரப்படி சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டி உள்ளது.இதேபோல, 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை 70 அடியை எட்டியுள்ளது. இதில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை 118.55 அடி உயரத்தை எட்டியிருந்தது. இந்நிலையில், காடம்பாறை அணையில் மின் உற்பத்தி காரணமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,284 கன அடியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 119.90 அடியை எட்டியது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 440 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆற்றுப்படுகை வழியாகவும் விநாடிக்கு 625 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பரம்பிக்குளம் அணை 70 அடியை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Deeper Dam , Aliyaru Dam, Pollachi, Flood Alert
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...