ரூ.2.07 கோடி மதிப்புடையது கோயில் இடத்தில் கட்டியிருந்த 16 வீடுகள் இடித்து தரைமட்டம்

*போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அதிரடி

கும்பகோணம் : கும்பகோணம் பெருமாண்டி தெருவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்போடு இடித்து அப்புறப்படுத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி தெருவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.

இக்கோயிலைச் சுற்றிலும் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பிலான 20,762 சதுர அடி பரப்பளவு கொண்ட 16 வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை அறிவிப்பு விடுத்தும், இதுநாள் வரை அகற்றப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து வீடுகளை அகற்றப்பட்டு பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் முன்னறிவிப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பதினாறு வீடுகளையும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைத்தனர்.

Related Stories:

More
>