×

6 ஆயிரம் கி.மீ பயணம் நீலகிரியிலிருந்து லடாக் வரை பைக்கில் சென்று மாணவர் சாதனை

மஞ்சூர் : நீலகிரியில் இருந்து லடாக் வரை பைக்கில் சென்று திரும்பி நீலகிரி மாணவர் நிதிஷ் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள சாம்ராஜ் பகுதியை சேர்ந்தவர் மணி. சாம்ராஜ் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை மேலாளராக உள்ளார். இவரது மகன் நிதிஷ் (22). கல்லுாரி மாணவரான நிதிஷ் பைக் ஓட்டுவதிலும் அதில் சாதனை படைக்க வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

குறிப்பாக இந்திய எல்லை பகுதியில் உள்ள லடாக் வரை பைக்கில் சென்று வரவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். இவரது லட்சியத்திற்கு பெற்றோர்களும் உற்சாகம் அளித்ததை தொடர்ந்து கடந்த 6ம் தேதி மாணவர் நிதிஷ் சாம்ராஜ் பகுதியில் இருந்து பைக்கில் தனியாக தனது பயணத்தை துவக்கினார்.
தொடர்ந்து டெல்லி, ஆக்ரா, பஞ்சாப், ஸ்ரீநகர், கார்கில் வழியாக இந்திய எல்லை பகுதியான லடாக்கை கடந்த 17ம் தேதி சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 30ம் தேதி நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் நகர் வந்தடைந்தார்.

மொத்தம் 25 நாட்களில் 13 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 6 ஆயிரம் கிமீ துாரம் பைக்கில் தனியாகவே பயணித்து லடாக் சென்று வீடு திரும்பினார். இவரது இந்த சாதனையின் மூலம் ஊட்டியில் இருந்து எல்லை பகுதியான லடாக் வரை பைக்கில் சென்ற முதல் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவர் நிதிஷ் கூறியதாவது: ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பயில்கிறேன். சிறு வயதில் இருந்தே நாட்டின் எல்லை பகுதியில் உள்ள லடாக் வரை பைக்கில் செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தேன். இதையடுத்து கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டுள்ளதையடுத்து லடாக்கிற்கு பைக்கில் சென்று வர முடிவு செய்து இம்மாதம் 6ம் தேதி வீட்டிலிருந்து தேசிய கொடி கட்டிய பைக்கில் பயணித்தேன்.

செல்லும் வழியில் போலீசார், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோருடன் என் பைக் பயணம் குறித்து பேசி அந்தந்த இடங்களில் தங்கி உணவருந்தி ஓய்வு எடுத்தேன்.பைக்கிலேயே லடாக் வரை சென்று வீடு திரும்பியுள்ளேன். இதற்காக மொத்தம் 6 ஆயிரம் கிமீ பயணித்துள்ளேன். இதனால் தற்போது எனது லட்சிய கனவு நிறைவேறியுள்ளது. லடாக் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்த ராணுவ வீரர்கள் என்னை உற்சாகப்படுத்தியதுடன் அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டேன்.

பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்களை சந்தித்தேன். எனது இந்த சாதனைக்கு தந்தை மணி, தாய் கீதா மற்றும் சகோதரி செளமியா மற்றும் நண்பர்கள் மிகுந்த ஊக்கமும், உற்சாகமும் அளித்தார்கள், என்றார்.

Tags : Ladakh , Manjur, Nilagiri, Bike ride,Student Record, Nithish, College Student
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...