×

குவியல் குவியலாக துப்பாக்கிகள்..டன் கணக்கில் தோட்டாக்கள்!: காபூல் விமான நிலையத்தில் ஆயுதங்களை விட்டு சென்ற அமெரிக்க ராணுவம்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்ட நிலையில் ஏராளமான ராணுவ விமானங்கள், வாகனங்கள் மற்றும் தளவாடங்களை விட்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளாக ஆப்கான் அரசுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த மே 1ம் தேதி முதல் வெளியேற தொடங்கின. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் படைகள் வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் கெடு விடுத்திருந்த நிலையில், 30ம் தேதி இரவு அமெரிக்காவின் கடைசி விமானம் காபூலை விட்டு புறப்பட்டு சென்றது.

இதையடுத்து காபூல் விமான நிலையம் தற்போது தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்நிலையில் ஏராளமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச விமானங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை அமெரிக்கா காபூல் விமான நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளது. 73 நவீன போர் விமானங்கள், 70 ராணுவ கவச வாகனங்கள், கண்ணிவெடி தாக்குதலை தாங்கும் திறனுள்ள 27 நவீன வாகனங்கள் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கருவிகள், குவியல் குவியலாக துப்பாக்கிகள் மற்றும் டன் கணக்கில் தோட்டாக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளன.

இந்த ஆயுதங்களை ஆப்கான் மக்களுக்கு எதிராக தாலிபான்கள் பயன்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் அனைத்தையும் செயலிழக்க செய்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. விமானங்கள், ஆயுதங்களை வெடி வைத்து அழித்தால் விமான நிலையம் பலத்த சேதம் அடையும் என்பதால் அவற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழக்க வைத்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் தாலிபான்கள் கையில் சிக்கியிருப்பது அண்டை நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Tags : US Army ,Kabul airport , Gun, bullet, Kabul airport, weapon, USA
× RELATED அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில்...