×

கொந்தகை அகழாய்வில் கிடைத்த சுடுமண் குடுவைகளை ஆய்விற்கு அனுப்ப முடிவு

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 தளங்களில் பிப். 13 முதல் ரூ.74 லட்சம் செலவில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகை தளத்தில் 7ம் கட்ட அகழாய்வில் 25 முதுமக்கள் தாழிகளும், 15 சமதளத்தில் புதைக்கப்பட்ட எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன.

இதில், 14 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதில் இருந்த மண்டை ஓடு, எலும்புகள், குடுவைகள், சுடுமண் பாத்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளில் இருந்தும் 2 முதல் 4 பாத்திரங்கள் வரை வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஒரு முதுமக்கள் தாழியினுள் இருந்து மட்டும் 2 குடுவைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிக்க முடியாத முதியோர்களை தாழிகளில் உணவு, தண்ணீரை வைத்து உயிருடன் புதைப்பது வழக்கம். தாழிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சுடுமண் பாத்திரங்களை ஆய்வு செய்தால், அவர்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள் என்ன என்பது தெரிய வரும். 7ம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக தாழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சுடுமண் பாத்திரங்களை ஆய்விற்கு உட்படுத்த தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தாழிகளினுள் இருந்த பாத்திரங்களின் உட்புறத்தில் ஒட்டியுள்ள உள்ள மண் துகள்கள்களில் பாக்டீரியாக்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை ஆய்வு செய்து, மண்டை ஓட்டின் பற்களையும் ஆய்வு செய்து இரண்டையும் சரிபார்த்தால் என்ன வகையான உணவுகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவரும். இதனால், 2,600 ஆண்டுகளுக்கு முன் என்ன வகையான உணவு வகைகள் இருந்தன என தெரிய வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

எனவே, சுடுமண் பாத்திரங்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முலம் உள்நாடு மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : Kontakai , Thirupuvanam,keeladi, konthagai,Suduman Kuduvai
× RELATED கீழடி அகழாய்வில் முதுமக்கள்தாழிகள், இரும்பு வாள் கண்டெடுப்பு..!