×

கூடலூர் அருகே யானை தாக்கி 2 வீடுகள் சேதம்

கூடலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி கிராமத்தில் ஆதிவாசி வீடுகள் உள்ளன. இந்த நிலையில் காட்டிலிருந்து வெளியேறிய விநாயகன் என்ற காட்டு யானை ஆதிவாசி  குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து அங்கு வசிக்கும் வெள்ளச்சி என்பவரது வீட்டை உடைத்துள்ளது.

தொடர்ந்து துதிக்கையை ஜன்னல் வழியே உள்ளே விட்டு சமையலறையில் இருந்த அரிசி மைதா மற்றும் தோசை மாவு ஆகியவற்றை சாப்பிட்டுள்ளது. அங்குள்ளவர்கள் யானையை விரட்டியும் அங்கிருந்து செல்லாமல் வெகுநேரம் நின்று உள்ளது. பின்னர் இதே பகுதியில் வசிக்கும் ஜார்ஜ்குட்டி என்பவரது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

கோவை தடாகம் பகுதியிலிருந்து பல மாதங்கள் முன் முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு வந்து விடப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலை வன எல்லை கிராமங்களான குனில்வயல், ஏச்சம்வயல், வடவயல், மண்வயல் உள்ளிட்ட  கிராமங்களில் அடிக்கடி புகுந்து வீடுகளை உடைத்து அரிசி பருப்பு போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது.

மேலும் விவசாயிகளின் விவசாய பயிர்களான தென்னை பாக்கு வாழை உள்ளிட்டவற்றையும் உடைத்து சேதப்படுத்துகிறது.  வனத்துறையினர் இந்த யானையை ஊருக்குள் வராமல் தடுக்க வன எல்லையில்  உள்ள அகழிகளை  ஆழப்படுத்தி மின்வேலி அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Goodalur , Cuddalore, nilagiri, Elephant, Houses Damaged
× RELATED கூடலூர் அருகே அச்சுறுத்தி வரும்...