×

தொடர் மழையால் வனச்சாலையில் நிலச்சரிவு தொட்டபெட்டா சிகரம் மூடல்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி :  வனச்சாலையில் மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் தொட்டபெட்டா சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலா மாவட்டமான  நீலகிரியில் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 4 மாதங்களுக்கு பின் கடந்த 23ம் தேதி முதல் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் திறக்கப்பட்டன.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங் மட்டம், கொடநாடு காட்சிமுனை உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த மாத துவக்கத்தில் பெய்த கனமழையால்  தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் வனச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்  சாலை பலவீனமடைந்துள்ளது. சிறிய அளவிலான வாகனங்கள்கூட செல்ல முடியாது என்பதால் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவாயில் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.


Tags : Landslide ,Thottapetta , Ooty,Forest Road, Thottabetta Peak, Tourist Banned
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து