×

முப்பந்தல் அருகே சிறுத்தை நடமாட்டம் : 2 ஆடுகளை கடித்து சென்றதால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி வடக்கு மலையடிவாரத்தில் சிறுத்தை, கரடி, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் உள்ளன. வடக்குமலை அடிவாரத்தில் வட்டப்பாறை அருகே  ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை உள்ளது. இதன் அருகே பல மாதங்களுக்கு முன்பு கரடி கூட்டமாக வந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை துரத்தியது. மேலும் அதே பகுதியில் காற்றாலை நிறுவன ஊழியர் ஒருவர் காற்றாலை அருகே போன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சிறுத்தை அவரை நோக்கி வந்தது. அவர் தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே உள்ள முப்பந்தல் பகுதியில் நாகர்கோவிலை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நெல்லி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பெருங்குடி பகுதியை சேர்ந்த கிட்டு (52) என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 150க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் கூட்டமாக சிதறி ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிட்டு அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு ஆட்டினை சிறுத்தை தூக்கி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சத்தம் போடவும் அது வேகமாக தோட்டத்திற்கு பின்னால் இருந்த ஓடைவழியாக சென்று காட்டுப்பகுதிக்கு  சென்றது.

அடுத்த நாள் இரவும் இது போன்று மற்றொரு ஆட்டினையும் அங்கு வந்த சிறுத்தை கடித்து சென்றது.  இதனால் அச்சம் அடைந்த அவர் தன்னுடைய ஆடுகளை தனது சொந்த ஊரான பெருங்குடி கொண்டு சென்றுவிட்டார். அதே தோட்டத்தில் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் தனக்கு சொந்தமான 4 ஆடு மற்றும் இரண்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட நாய்கள் சத்தம் போடவும் சந்தேகமடைந்த முருகேசன் அப்பகுதியில் டார்ச் லைட்டை அடித்தவாறு சென்றுள்ளார். டார்ச்லைட் வெளிச்சத்தை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை அங்கிருந்து ஓடியது. அது தோட்டத்தின் அருகே உள்ள காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு காம்பவுண்ட் சுவர் அடிப்பகுதியில் உள்ள ஒரு இடைவெளி வழியாக சென்றது.

அடுத்த நாள் அந்த இடைவெளியினை அடைத்தார். இருப்பினும் எந்த நேரத்திலும் சிறுத்தை இப்பகுதிக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளார். எனவே வனத்துறையினர் பொதுமக்களின் அச்சத்தை போக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Mubbandal , Aaralvaimozhi,Leopard, Elephant, Monkey, Goat
× RELATED முப்பந்தல் அருகே இன்று காலை பரபரப்பு...