×

மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னனுக்கு அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர் என்று சாதனை சான்றிதழ்

சேலம் :சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், இந்தியாவிலேயே அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர் என்ற பெருமையை படைத்துள்ளார். டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இதற்கான சான்றிதழை அவருக்கு வழங்கி உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன். இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

உள்ளாட்சி தேர்தல் முதல் மாநிலங்களவை  தேர்தல் வரை, அனைத்திலும் விஐபிக்களை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட, அவர் வெற்றி பெற்றதில்லை. இருப்பினும் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை உணர்த்தவே தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து வருகிறார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், லிம்கா சாதனை புத்தகம், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் போன்ற அமைப்புகள் தங்களது புத்தகத்தில், அவரது பெயரை இடம் பெறச் செய்துள்ளது. இந்தவகையில் தற்போது அதிக தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் என்ற சாதனையாளராக டெல்லி புக்ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறுகையில், ‘‘இதுவரை 31 லோக்சபா, 41 ராஜ்யசபா, 66  அசெம்பிளி, 2 எம்எல்சி, 3 சேர்மன், 2 பஞ்சாயத்து தலைவர், 4 வார்டு உறுப்பினர், 31 கூட்டுறவு சங்கங்கள் என்று இதுவரை 219 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். 5 ஜனாதிபதிகள், 5 துணை ஜனாதிபதிகள், 4 பிரதமர்கள், 13 முதலமைச்சர்கள், 14 மாநில அமைச்சர்கள், 7 அரசியல் கட்சி தலைவர்கள், 17 விஐபிக்களை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளேன்.

உருட்டல், மிரட்டல், கேலி, கிண்டல் என்று அனைத்தையும் எதிர்கொண்டுள்ளேன். இதுவரை ₹50 லட்சம் வரை டெபாசிட் தொகையாக கட்டி இழந்துள்ளேன். வெற்றி பெற்றவர்களை மட்டுமே, இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  தோல்வியே வெற்றிக்கு முதல்படி. தோல்வியால் யாரும் துவண்டு விடக்கூடாது. தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், எனக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே, இன்றைய இளைஞர்கள் தோல்விகளை கண்டு மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்டால், சாதனை என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று என்பதை இங்கே பதிவு  செய்ய விரும்புகிறேன்,’’ என்றார்.

Tags : Matteur , Election Mannan, PadmaRajan,
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு