×

கிருஷ்ணகிரி அணை மதகு அருகில் ஆக்கிரமிப்பு ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணை மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலையில் கிருஷ்ணகிரி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியமுத்தூர், திம்மாபுரம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளைச் சேர்ந்த 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் தென்பெண்ணை ஆற்றில் திம்மாபுரம் பகுதியில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு திறந்துவிட்டுள்ளனர். இந்நிலையில், அணையின் பிரதான மதகுகளின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாக காணப்பட்டாலும், தண்ணீரிலேயே அழுகி வருவதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், தண்ணீர் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகாயத்தாமரைகள் அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் மேலும் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. தற்போது அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த அணையின் அருகில் உள்ள ஆற்றில் பொதுமக்கள் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் துர்நாற்றத்தை கண்டு குளிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kṛṣṇakiri Dam , Krishnagiri, Agaya Thamarai, krishnagiri Dam
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிவு