சென்னையை அடுத்த வானகரம் உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்: வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

சென்னை: சென்னையை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர், சூரப்பட்டு உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். பிறகு, 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டிலோ, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன்படி தமிழகத்திலுள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பிறகு, சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: