×

கருணை அடிப்படையிலா தமிழகத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது?

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கோவை தெற்கு உறுப்பினர் வானதி சீனிவாசன் (பாஜ) பேசியதாவது:
கோவை விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றும் இன்னும் முடியவில்லை. இது அந்த மாவட்ட வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு நில எடுப்பு பணி முடிந்துவிட்டது. கோவை விமான நிலையத்திற்கு நில எடுப்பில் இருக்கும் பிரச்னைகளை உறுப்பினர் எடுத்துச் சொல்லலாம். அப்படி செய்தால் கோவை விமான நிலையத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: உறுப்பினர் இங்கே ஏதோ, ஒன்றிய அரசு கருணை அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதைப் போல பேசினார். மத்திய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் வருவாய் ஈட்டிக் கொடுத்தால், அதில் 35, 40 பைசாவைத் தான் நமக்கு தருகிறார்கள். எனவே, கருணை அடிப்படையில் நிதியை தரவில்லை. இது மக்கள் பணம்.

வானதி சீனிவாசன்: கருணை அடிப்படையில் நிதி வழங்கப்பட்டதாக நான் சொல்லவில்லை. கற்பனையாக நினைத்துக் கொண்டு அமைச்சர் பேசுகிறார். மக்கள் வரி பணம் அரசுக்கு போய் திட்டங்களாக மீண்டும் வருகிறது. தமிழகத்திற்கு 3 மெகா ஜவுளிப் பூங்காவை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு இந்த பார்க் வரும்போது, அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அது அவர்களின் வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும். பஞ்சமி நிலம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: பஞ்சமி நிலம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 297 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதை மீட்டு அதே வகுப்பினரிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 


Tags : Union Government ,Tamil Nadu , Is the Union Government allocating funds to Tamil Nadu on the basis of mercy?
× RELATED தொடங்கியது தேர்தல் பரப்புரை; ஒன்றிய...