×

பெங்களூரு அருகே கார் விபத்து ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோரமங்களா மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில், கார் ஒன்று அதிவேகத்தில் சென்று சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது ஏறி, அப்பகுதியில் உள்ள இரும்பு மின் கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் முழுவதுமாக நொறுங்கியது. காரில் பலர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர். ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

விசாரணையில், விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாசின் மகன் கருணா சாகர் (26) என்று தெரிய வந்தது. மற்ற 6 பேரும் பெங்களூரு கோரமங்களா முருகேஷ் பாளையாவை சேர்ந்த பிந்து (28), கேரளாவை சேர்ந்த அக்‌ஷய் கோயல் (23), புனேவை சேர்ந்த இஷிதா (21), தனுஷா (21), ஹுப்பள்ளியை சேர்ந்த ரோஹித் (23), அரியானாவை சேர்ந்த உச்சவ் (23) என்று தெரிய வந்தது. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்கு பின், கருணாசாகரின் உடல் காலை 10 மணியளவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று நண்பகல் ஓசூர் அடுத்த தளி சாலையில் உள்ள சொந்த ஊரான பேளகொண்டப்பள்ளிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், பேளகொண்டப்பள்ளிக்கு நேரில் வந்து, கருணாசாகர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிரகாஷ் எம்எல்ஏவுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

* மனைவி இறந்த 2 மாதத்துக்குள் ஒரே மகனையும் இழந்த எம்எல்ஏ
ஓசூர் தொகுதி எம்எல்ஏ பிரகாஷின் மனைவி, உடல் நலக்குறைவால் கடந்த ஜூலையில் காலமானார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5ம் தேதி அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார். மனைவியின் இறப்பு நடந்த துக்கத்தில் இருந்து பிரகாஷ் இன்னும் மீளாத நிலையில், அவரது ஒரே மகன் கருணா சாகரும் விபத்தில் பலியாகி இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மகன் கருணா சாகர், பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனைப் பறிகொடுத்திருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்க்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Bangalore ,Hosur ,DMK , 7 killed in car accident near Bangalore, including son of Hosur DMK MLA
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...