கீழ் பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது: காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘கீழ் பாசன மாநிங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே கண்டிப்பாக அணை கட்ட முடியாது,’ என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவர் எஸ்.கே.ஹல்தர் திட்டவட்டவமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவருமான எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தமிழகத்தின் தரப்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேப்போன்று கர்நாடகா அரசு தரப்பில் கூடுதல் செயலாளர் ராகேஷ் சிங் கலந்து கொண்டார். இதில், கூட்டம் தொடங்கியதுமே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு எதிரிவித்த தமிழக அதிகாரிகள், ‘மேகதாது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், மேகதாது பற்றி இங்கு விவாவாதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீர் பங்கீட்டை கர்நாடகா அரசு கொடுக்கவில்லை.

தற்போது வரையில் அது நிலுவையில் உள்ளது. அந்த ஒதுக்கீட்டு நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்,’ என வலியுறுத்தினர். கூட்டத்துக்குப் பிறகு காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவர் எஸ்.கே.ஹல்தர் அளித்த பேட்டியில், ‘‘மேகதாது விவகாரத்தில் 4 மாநிலங்களுடன் விரிவாக விவாதித்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும். காவிரியில் கர்நாடகா அணை கட்ட வேண்டும் என்றால் அந்த நீரை பயன்படுத்தும் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதி கட்டாயம் தேவை. இல்லை என்றால், இந்த திட்டம் சாத்தியம் கிடையாது,’’ என்றார். இதையடுத்து, அடுத்த கூட்டம் வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

* 30 டிஎம்சி நீரை உடனே திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவர் எஸ்.கே.ஹல்தர் மேலும் கூறுகையில், ‘‘தமிழகத்துக்கு ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டில் மொத்தம் 86.380 டி.எம்.சி நீரில், 55.757 டி.எம்.சி மட்டும் தரப்பட்டுள்ளது. அதனால், மீதமுள்ள 30.6 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். அதேப்போல், செப்டம்பருக்கான நீரையும் உடனடியாக திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்றார்.

Related Stories:

More
>