உச்ச நீதிமன்ற வரலாற்றில் சாதனை 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் நேற்று ஒரே நேரத்தில் பதவியேற்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34. இந்த முழு எண்ணிக்கையும் நிரப்பப்படாமல் இருந்தது. சமீபத்தில் மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால், ஏற்கனவே இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், மூன்று பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை புதிதாக நியமிக்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அடங்கிய கொலிஜியம், கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்தனா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன. இதைத் தவிர, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் இடம் பெற்றது. இந்த பரிந்துரைக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியது. கடந்த 26 தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், ஒன்பது நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள புதிய இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விழா நடந்தது. வழக்கமாக, இது போன்ற புதிய நீதிபதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி, தலைமை நீதிபதியின் விசாரணை நீதிமன்ற அறையில்தான் நடக்கும். தற்போது, கொரோனா தொற்று பிரச்னையால், முதல் முறையாக புதிய அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவியேற்று இருப்பது, இதுவே முதல்முறை. இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>