×

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினர் மா.செந்தில்குமார் (அதிமுக) பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் நலன் கருதி கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லூரி அவசியமாக அமைக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 3 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும், 3 அரசு கலை கல்லூரிகளும், 22 சுயநிதி கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. எனவே, கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லூரி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. பொறியியல் கல்லூரியை பொறுத்தவரை, அவைகளுக்கு கட்டிடம், விடுதிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கும் செலவு ரூ.96 கோடி ஆகும். ஆண்டு ஊதியமாக ரூ.17.18 கோடி செலவாகும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1380 மாணவர்களை சேர்க்கலாம். ஆனால், 2020-21ல் 462 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். காலி இடமே 918 இருக்கின்றன. இன்றைக்கு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டிருக்கிறது. அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. அதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான் சார்ந்திருக்கின்ற திருக்கோவிலூர் தொகுதியிலும் அரசு கலை கல்லூரி அறிவித்து இருக்கிறோம். பொறியியல் கல்லூரியை வலியுறுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
செந்தில்குமார் (அதிமுக): கள்ளக்குறிச்சி 5 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அதனால், அரசு பொறியியல் அவசியம் தேவைப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி: கள்ளக்குறிச்சியில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை. அதை நிரப்பினாலே போதும். இப்போதைக்கு பொறியியல் கல்லூரி துவங்க வாய்ப்பு இல்லை.
முன்னாள் சபாநாயகர் தனபால் (அதிமுக): மிகவும் பிற்படுத்தப்பட்ட அவிநாசி தொகுதியிலே ஒரு பொறியியல் கல்லூரி அமைக்க முன்வருவாரா?
அமைச்சர் பொன்முடி: பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் வேலையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தான் தமிழக முதல்வர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதன் பாடத்திட்டத்தை எல்லாம் மாற்றி அமைத்து இருக்கிறார்.

Tags : Minister ,Ponmudi , Increase in enrollment of students in arts and science colleges: Minister Ponmudi's reply
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...