×

நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்த மாநில அளவில் நில எடுப்புக்காக தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:
* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்தூக்கி வசதியுடன் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள் ரூ.12.50 கோடியில் புதிதாக கட்டப்படும்.
* விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் ரூ.72 கோடியில் கட்டப்படும்.
* விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
* அ-பதிவேடு, சிட்டா, புலப்படம், பயிர் சாகுபடி, நில பயன்பாடு போன்ற விவரங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த நில ஆவணம் இணையவழி சேவை மூலம் வழங்கப்படும்.
* புல எல்லையை அளந்து காட்ட பொதுமக்கள் எங்கிருந்தும் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
* மத்திய நில அளவை அலுவலகம் மற்றும் நலவரி திட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களை ஒளிபிம்ப நகல் எடுத்து பராமரிப்பதற்காகவும், தேவைக்கேற்ப பயன்படுத்தவும் ரூ.8.74 கோடியில் மென்பொருள் உருவாக்கப்படும்.
* முறையற்ற நில பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையில், இணையவழி சேவையில் உள்ள நில ஆவணங்கள பிற அரசு துறைகள், நீதிமன்றங்கள், பாதுகாப்பு துறையுடன் ஒருங்கிணைப்படும்.
* கடலோர மாவட்டங்களில் ஏற்படும் பேரிடர்கள் அபாயத்தை சிறப்பாக கையாள, 13 கடலோர மாவட்டங்கள் (சென்னை நீங்களாக) நீலகிரி மாவட்டம் என 14 வட்டாட்சியர் பணியிடங்களை துணை ஆட்சியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
* வெள்ள பாதிப்பு தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள 187 தானியங்கி வானிலை மையங்கள், தானியங்கி மழைமானிகள் 1000 குறுவட்டங்களில் ரூ.25 கோடியில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் நில எடுப்பு நடவடிக்கைகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைபடுத்தும் பொருட்டு, நில உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீட்டு தொகையை தீர்மானிக்க மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான நில எடுப்பு சிறப்பு அலகுகளையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* இந்தியாவிலேயே இதுதான் முதல்
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பெட்ரோல், டீசல் அடிப்படையிலான வாகனங்கள் படிப்படியாக குறைந்து, வருங்காலங்களில் போக்குவரத்து அமைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்கள், தன்னியக்க வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்கள், அறிவுசார் தொடரமைப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ரூ.300 கோடியில் வருங்கால நகர்திறன் பூங்கா உருவாக்கப்படும். சிப்காட் நிறுவனம் எடுக்கும் இந்த புதிய முயற்சி இந்தியாவிலேயே முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

* எளிதில் லைசென்ஸ் பெற 2.0 ஆப் உருவாக்கம்
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* வணிகம் புரிதலை எளிதாக்கிடவும், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவையான அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும், செயல்படுத்துவதற்கு ஏதுவாக  ஒற்றை சாளர இணையதளம் 2.0 மொபைல் ஆப் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில்  மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு தேவைப்படும் அதிகஅளவு சிமெண்ட் மிக குறுகிய காலத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் 100 டன் ஏற்றுத்திறன் கொண்ட சிமெண்ட் மொத்தமாக ஏற்றும் அமைப்பு ரூ.75 லட்சம்  மதிப்பில் அரியலூரில் உள்ள புதிய ஆலையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.

Tags : Minister ,KKSSR , A separate body for land acquisition will be set up at the state level to simplify practical issues: Minister KKSSR Announcement
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை...