×

காயலான் கடையில் பயங்கர தீ விபத்து: எம்பி நேரில் சென்று ஆறுதல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே காயலான் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 கோடி பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையறிந்த எம்பி செல்வம், நேரில் சென்று உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (50). வீட்டின் அருகே சொந்தமாக காயலான் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வரும் ஒருசில பழைய வீட்டு உபயோக பொருட்களை, பழுது பார்த்து விற்பனை செய்கிறார். 2 பேர், ஊழியராக வேலை செய்கின்றனர். இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், கைடையை பூட்டிவிட்டு, அப்துல்ரசாக் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், நள்ளிரவில் கடையில்  திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அங்கிருந்த பர்னிச்சர் பொருட்களும், கட்டில், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மின்மோட்டார் உள்பட ஏராளமான பழைய வீட்டு உபயோக பொருட்கள் எரிந்தன. இதை கண்ட அப்துல்ரசாக், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. கடை முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, மதுராந்தகம், திண்டிவனம், தெள்ளாறு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. புகாரின்படி, ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து தற்செயலாக நடந்ததா, தொழில் போட்டியில் யாரேனும் சதி வேலையில் ஈடுபட்டார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். தீ விபத்தில், கடையில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும், காஞ்சிபுரம் திமுக எம்பி செல்வம், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், கடை உரிமையாளர் அப்துல்ரசாக்கிடம் ஆறுதல் கூறினார். அவருடன் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள், பேக்கரி ரமேஷ், ரத்தினவேலு உள்பட பலர் இருந்தனர்.


Tags : Kayalan , Terrible fire accident at Kayalan shop: MP go in person and comfort
× RELATED ஊரப்பாக்கம் அருகே காயலான் கடைக்காரர்...