வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கம்: தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு திறனறித்தேர்வு..!

சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 

* தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் திறக்குறள் இன்றைய தலைமுறையினரை சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகளுடன் இணைந்தும் இணைய வடிவிலும் அசைவூட்டும் படங்கள், வினாடி வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கனெ சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.

* பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின்  மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்களை தேர்வு செய்து மாதம் தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதில், 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.2 கோடியே 70 லட்சமும், 2022-23ம் ஆண்டிற்கு ரூ.5 கோடியே 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* திருக்குறள் முற்றோதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறள் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத் தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு, பரிசுத் தொகை உயர்த்தப்படும்.

* தமிழ அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பரிசுத் தொகைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சங்க இலக்கிய வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் புகழ்மிக்க ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு, எளிய விளக்கவுரையுடன் உயர்தர அச்சு நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழின் வாய்ப்பாட்டு மரபை அடுத்த தலைமையினருக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் அறநிலையத்துறை உடன் இணைந்து நடத்தப்படும்.

* சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து எளிமை பதிப்புகளாகவும் திராவிட களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

* பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடப்படும்.

 * செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் புதிய கலைச்சொற்கள் உருவாக்கத்தை இணையவழியில் அறிமுகம் செய்து மொழியியல் அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுக் கலைச் சொற்கள் தரப்படுத்தப்படும்.

* தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும், ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப்பெற வழிவகை செய்யப்படும்.

* தமிழை பிறமொழியினருக்கு கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாட நூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலிகளும் உருவாக்கப்படும்.

* ஆட்சிச் சொல் அகராதி திருந்திய பதிப்பு மற்றும் அரசுத்துறைகளின் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>