போரூர் ஏரி கால்வாயை தூர்வார வேண்டும்: பேரவையில் காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி (திமுக) பேசியதாவது: நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: சென்னையை சுற்றி 32 கி.மீ., தூரத்துக்கு பெல்ட் ஏரியா என்று சொல்லி, 1962ம் ஆண்டே நகரத்தை ஒட்டிய இந்த பகுதிகளில் பட்டா வழங்க தடை இருக்கிறது. இடம் நெருக்கடியாக இருப்பதால் அரசு புறம்போக்கு நிலங்கள் அரசுக்கு வேண்டும் என்று இந்த தடையை விதித்துள்ளனர். இதில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்று  கலைஞர் முதல்வராக இருந்த போது, நத்தத்தில் வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

இப்போது பட்டா வழங்குவதில் சிரமம் இருக்கின்ற காரணத்தால், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை காலி செய்து, குடிசை மாற்று வாரிய வீடுகளில் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். நீர்நிலை புறம்போக்கில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் வகையில் சட்டம் கடுமையாக இருக்கிறது.  நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை இடிக்கும் பணியை இந்த அரசு செய்யும். காரம்பாக்கம் கணபதி: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள போரூர் ஏரிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் உள்ளது. இதை அகலப்படுத்தி தூர்வாரி தண்ணீரை தேக்கினால் சென்னைக்கு குடிநீர் தேவைக்கு பயன்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories:

>