×

பெண்கள் விஷயத்தில் ரூ.1 லட்சம் பறிப்பா? உளவுத்துறை போலீஸ்காரரை கடத்திய குற்றவாளிகளில் ஒருவர் ஓசூரில் கைது: போதை ஊசி சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னை:சென்னை டிஜிபி அலுவலகத்தில் மாநில உளவுத்துறை தலைமை காவலராக ரவி (45) என்பவர் உள்ளார். இவர், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராமிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 28ம் தேதி காலை உளவுத்துறை தலைமை காவலர் ரவி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜய் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் தன்னை டிஜிபி அலுவலகத்தில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்று 18 மணிநேரம் காரில் வைத்து கடத்தியும், போதை ஊசிபோட்டும், என் பணம் 1 லட்சத்தை கூகுள் பே மூலம் கொள்ளையடித்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி, சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அப்போது சூளைமேடு பெரியார் பாதை என்ற இடத்தில் உளவுத்துறை காவலர் ரவியை, அஜய் விக்கி ஆகியோர் காரில் சிரித்தபடி ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதேபோல், கடத்தி சென்றதாக கூறப்படும் சோழிங்கநல்லூர் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் இறங்கி செல்வதும், பிறகு மறுநாள் வெளியே வருவதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இரவு முழுவதும் பண்ணை வீட்டில், தலைமை காவலர் தங்க என்ன காரணம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் தலைமை காவலர் ரவியின் புகாரிலும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அதை தொடர்ந்து குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஓசூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சூளைமேடு போலீசார் ஓசூர் போலீசார் உதவியுடன் குற்றவாளிகளில் ஒருவரான சூளைமேடு பாரி தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவனை பிடித்தனர். அவனுடன் தங்கி இருந்த முக்கிய குற்றவாளியான அஜய் விக்கி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் காரில் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசாரிடம் ஓசூர் போலீசார் பிடிபட்ட விக்னேஷை ஒப்படைத்தனர்.

மேலும், தப்பி ஓடிய 2 பேர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து 2 குற்றவாளிகளையும் பிடிக்க தனிப்படை ஒன்று பெங்களூரு விரைந்துள்ளது. பிடிபட்ட நபரை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அவனிடம் விசாரணை நடத்தினால் தான் உளவுத்துறை காவலர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உளவுத்துறை தலைமை காவலர் ரவி சூளைமேடு பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு அல்லது பெண்கள் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் ரூ.1 லட்சத்தை குற்றவாளி அஜய் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து பறித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் முக்கிய குற்றவாளி அஜய் விக்கி கைது செய்யப்பட்டால் தான் உளவுத்துறை தலைமை காவலர் ரவி கடத்தப்பட்ட விவரம் குறித்து முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags : Hosur , Rs 1 lakh extortion in case of women? One of the kidnappers of the intelligence police arrested in Hosur: a sudden turn in the drug injection incident.
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...